Monday 25 April 2011

Kulasami enga aaththaa....

பேருவெச்ச சாமிக்கெல்லாம்
பிள்ளையுண்டோ தெரியலையே!
பெறந்த பிள்ளை ஒவ்வொண்ணுக்கும்
தெரிஞ்ச சாமி தாய்தானே..

பத்து நிமிஷப் பணி முடிச்சு
அப்பக்காரன் போயிடுவான்
நித்தம் நித்தம் பனிக்குடத்தை
பத்தியமா சுமப்பாளே

ஒருகளிச்சு படுத்திருப்பா - மறந்தும்
உருண்டு படுக்க மாட்டா
கருப்பையிலே கிடக்கும் பிள்ளை
அசையிறத ரசிப்பாளே

பதினஞ்சு வருஷத்தவம்
பகீரதன் இருந்ததுபோல்
பத்து மாசத்தவம் இருந்து
முட்டிபோட்டு பெத்தெடுத்தா

தண்ணிக்குள்ள கிடந்த பிள்ளை
தலை திரும்பி சுகமானா
ரெட்டைக்கிடா வெட்டறேன்னு
கருப்பனுக்கு வேண்டிகிட்டா

பிறந்த பிள்ளை அழுகை கேட்டு
ஆனந்தமா அவ அழுதா
அத்தோட சரி ........     பிறகு
அது அழுதிட தாங்கமாட்டா

காம்பு தேடி அலையும் பூவை
கண் குளிர ரசிச்சிருவா
முட்டி மோதி பசியாற
முழு ஜென்மப் பலன் பெறுவா

ஜொள்ளுவிட்டு சின்ன பிள்ளை
சொல்லும் சொல்லை ரசிப்பாளே
அம்மான்னு சொன்னாப்போதும்
அரைக்கிறுக்கி ஆவாளே

கர்ப்பத்திலே வளர்க்கையிலே
கவலையில்லே கண்ணம்மா
கையில வளர்திடத்தான்
கண்ணுறங்க மாட்டாளே

ஈ எறும்பு அண்டுமுன்னு
இடுப்பிலேயே சுமப்பாளே
காத்து கருப்பு பாக்குமுன்னு
கண்ணில் வெச்சு காப்பாளே

எந்திரிச்சு நிக்கையிலே
எட்டு வெச்சு நடக்கயிலே
பட்டு பாதம் நோகுமுன்னு
நெஞ்சிலேதான் சுமப்பாளே

 தட்டாம வளர்த்த பிள்ளை
பட்டாளம் போவதைப்போல்
பள்ளிக்கூடம் போற பிள்ளை
பவிசு கண்டு பூரிப்பா

பாட்டி சுட்ட வடை கதையோ
வழக்கமான பழங்கதையோ
கலகலன்னு பிள்ளை சொல்ல
கண் இமைக்க மறப்பாளே

கைக்குள்ள வளர்ந்த பிள்ளை
கன்னிப் பிள்ளை ஆன போது
வனப்புக்கண்டு குளுந்த மனசில்
நெருப்பு சுமந்து நிப்பாளே  

கோலம் போடச் சொல்லித்தந்தா
கொழம்பு கூட்ட சொல்லித்தந்தா
என் ஆத்தா அவளைப்போல
அறிவு தந்த ஆசான் இல்ல

சமையலோட விட்டுடலே
சகல கலையும் சொல்லித்தந்தா
புகுந்த வீட்டில் பொறந்த வீட்டு
பேறு நிலைக்கச் சொல்லித்தந்தா

சீரோடும் சிறப்போடும்
சிங்காரிச்சு வளத்தவள
வேரோடு அகழ்ந்தெடுத்து
வேற வீட்டில் நட்டுப்புட்டா

மன்மதனாம் மாப்பிள்ளைக்கு
மலைபோல சீர்கொடுத்து
ரதிபோல பொண்ணைத்தான்
ரதம் ஏத்தி அனுப்பி வச்சா

வில்லுவண்டி பூட்டி
வேறவீடு போனபெண்ணை
பத்துமாசம் சென்டதுமே
பந்தி போட்டுக் கூட்டிவந்தா

தன்னைப்போல் தன் மகளும்
தனிக் கதையத் தொடங்கிடவே
பாட்டி எனும் பேர்வாங்கி
பாங்கு சொல்லி அமர்ந்தாலே

வாழையடி வாழையாக
வழக்கமெல்லாம்சொல்லித்தந்து
ஊர் ஓரத் தோப்புக்குள்ளே உறங்கப்போன எந்தாயீ !!!

உறங்கிப்போன என் ஆத்தா !
உன்ன மறக்க முடியலையே
உன்னைப்போல பெறேடுப்பேன்
உறுதிசொல்வேன் உறங்கிடம்மா!!!



































Sunday 6 March 2011

savukkadi

சவுக்கடி ....

நீரில் கரையாத 
நெருப்பில் கருகாத 
தங்கமே ....!
வேண்டாம் தலைக்கனம்
இதோ....
உன்னையும் உருக்கிட 
உருவைக் குலைத்திட 
தயார்....
"ராஜத்ராவகம் "

தலையின் கனத்தால்
தானே அழிகிறது 
"தீக்குச்சி"

வாயின் கொழுப்பால் 
வலிய வினை தேடுகிறது 
"தவளை"

புதைந்து போனதை எண்ணி
புலம்பாமல்
பொறுமையோடு காத்திருந்ததால்
கரிகூட ஜொலிக்கிறது
"வைரமாய்"
எனவே ...
புரிந்துகொள் மானிடா ...!
 உன்னுள் புதைந்து இருக்கும்
ஆற்றலை 
பொறுமையோடு வெளிக்கொணர்

ஆபத்துதான்...
கணம் எங்கிருந்தாலும்.... 

Ninaivil karaindha nithirai

நினைவில் கரைந்த நித்திரை ....


ஓலைக் குடிசைக்குள்ளே 
ஏழைக் குடியானவன் 
பட்டங்கள் பெறுவதாய்
பகல்க் கனாக் கண்டுகொண்டிருந்தான்

இத்துப்போன ஓலை 
இடுக்கின்வழியே வந்து
சுர்ரென சுட்டது 
சூரியனின் ஒளி...!!

சட்டெனக் கலைந்தது 
சாமானியன் கனவு !
கொட்டாவி விட்டுக்கொண்டே 
குடிசை விட்டு வெளியே வந்தான் ...

sugam

சுகம்.....

மார்கழியின் பனியும் சுகம்
மனதிற்கினிய பாடல் சுகம்
மல்லிகையின் மணமும் சுகம்  
மயக்கும் மாலை நிலவு சுகம் 

தூறுகின்ற சாரல் சுகம் 
தூவானவில்லின் வண்ணம் சுகம்
புலரும் காலைப் பொழுது சுகம் 
காலை நேரத் தூக்கம் சுகம் 

பூமி நனைத்த மலையின் வாசம் 
பூக்கத் துடிக்கும் மொட்டும் சுகம் 
அழும்  குழந்தையை அணைக்க சுகம்
அணைக்கும் அன்னை மடியே சுகம் ....!!!!  

vidhavai


விதவை ...

இறைவா உன் சித்து 
என் நெஞ்சிலே பித்து 
இருந்த ஒரு துணையை
இரக்கமின்றி ஏன் பிரிச்ச

என்ன தவறு செய்தேன் 
என் உயிரை நீ பறிச்ச 
உற்றார் உறவினரும் 
சுற்றமும் சூழ நின்னு

ஆறுதல் தான் சொன்னாலும் 
அவர் துணை போல ஆகிடுமா ?
"அமுதே" அச்சம் என்ன 
அருகினிலே நானிருப்பேன்

உன்னுடம்பைப் பாத்துக்கோன்னு 
உரம் கொடுத்த என் கணவா.....
உயிரான என்ன விட்டு - வேற 
உலகம் தேடிப்போனதென்ன .....!



raman

 ஏ.... ராமா ..

என் கணவன் ராமன் தான் ..!
         எத்தனை அவதாரங்கள் நான் 
         எடுத்த போதும்
         சளைக்காமல் என்னை  
         சம்ஹாரம் செய்கிறான் !!    
ஏனோ ....
        நான் ராவணன் அல்ல 
        சீதை என்பதை சிந்திக்க மறந்து விடுகிறான் ...!!

Madurai

மதுரை ....

குறையிலா வளம் கொண்ட 
                                       கூடல் நகரில் 
கரையிலாக் கையில்  செங்கோல் 
                                         ஏந்திய காவலன் !
குற்றமெனக் காவலர் சொன்ன
                                        சொல் கேட்டு
முறையின்றி முன் அறிவின்றி 
                                        விதித்த தீர்ப்பால்
சிரம் போனது கண்ணகி 
                                         கணவனுக்கு
ஆறாம் போனது அந்நாட்டினின்று
                                         செய்வதறியாது
மரம்போல் நின்ற மக்களோடு     
                         
தரையோடு சாம்பலாய் தகித்தடந்கிற்று

                                           ..........................மதுரை !!