Sunday 6 March 2011

savukkadi

சவுக்கடி ....

நீரில் கரையாத 
நெருப்பில் கருகாத 
தங்கமே ....!
வேண்டாம் தலைக்கனம்
இதோ....
உன்னையும் உருக்கிட 
உருவைக் குலைத்திட 
தயார்....
"ராஜத்ராவகம் "

தலையின் கனத்தால்
தானே அழிகிறது 
"தீக்குச்சி"

வாயின் கொழுப்பால் 
வலிய வினை தேடுகிறது 
"தவளை"

புதைந்து போனதை எண்ணி
புலம்பாமல்
பொறுமையோடு காத்திருந்ததால்
கரிகூட ஜொலிக்கிறது
"வைரமாய்"
எனவே ...
புரிந்துகொள் மானிடா ...!
 உன்னுள் புதைந்து இருக்கும்
ஆற்றலை 
பொறுமையோடு வெளிக்கொணர்

ஆபத்துதான்...
கணம் எங்கிருந்தாலும்.... 

Ninaivil karaindha nithirai

நினைவில் கரைந்த நித்திரை ....


ஓலைக் குடிசைக்குள்ளே 
ஏழைக் குடியானவன் 
பட்டங்கள் பெறுவதாய்
பகல்க் கனாக் கண்டுகொண்டிருந்தான்

இத்துப்போன ஓலை 
இடுக்கின்வழியே வந்து
சுர்ரென சுட்டது 
சூரியனின் ஒளி...!!

சட்டெனக் கலைந்தது 
சாமானியன் கனவு !
கொட்டாவி விட்டுக்கொண்டே 
குடிசை விட்டு வெளியே வந்தான் ...

sugam

சுகம்.....

மார்கழியின் பனியும் சுகம்
மனதிற்கினிய பாடல் சுகம்
மல்லிகையின் மணமும் சுகம்  
மயக்கும் மாலை நிலவு சுகம் 

தூறுகின்ற சாரல் சுகம் 
தூவானவில்லின் வண்ணம் சுகம்
புலரும் காலைப் பொழுது சுகம் 
காலை நேரத் தூக்கம் சுகம் 

பூமி நனைத்த மலையின் வாசம் 
பூக்கத் துடிக்கும் மொட்டும் சுகம் 
அழும்  குழந்தையை அணைக்க சுகம்
அணைக்கும் அன்னை மடியே சுகம் ....!!!!  

vidhavai


விதவை ...

இறைவா உன் சித்து 
என் நெஞ்சிலே பித்து 
இருந்த ஒரு துணையை
இரக்கமின்றி ஏன் பிரிச்ச

என்ன தவறு செய்தேன் 
என் உயிரை நீ பறிச்ச 
உற்றார் உறவினரும் 
சுற்றமும் சூழ நின்னு

ஆறுதல் தான் சொன்னாலும் 
அவர் துணை போல ஆகிடுமா ?
"அமுதே" அச்சம் என்ன 
அருகினிலே நானிருப்பேன்

உன்னுடம்பைப் பாத்துக்கோன்னு 
உரம் கொடுத்த என் கணவா.....
உயிரான என்ன விட்டு - வேற 
உலகம் தேடிப்போனதென்ன .....!



raman

 ஏ.... ராமா ..

என் கணவன் ராமன் தான் ..!
         எத்தனை அவதாரங்கள் நான் 
         எடுத்த போதும்
         சளைக்காமல் என்னை  
         சம்ஹாரம் செய்கிறான் !!    
ஏனோ ....
        நான் ராவணன் அல்ல 
        சீதை என்பதை சிந்திக்க மறந்து விடுகிறான் ...!!

Madurai

மதுரை ....

குறையிலா வளம் கொண்ட 
                                       கூடல் நகரில் 
கரையிலாக் கையில்  செங்கோல் 
                                         ஏந்திய காவலன் !
குற்றமெனக் காவலர் சொன்ன
                                        சொல் கேட்டு
முறையின்றி முன் அறிவின்றி 
                                        விதித்த தீர்ப்பால்
சிரம் போனது கண்ணகி 
                                         கணவனுக்கு
ஆறாம் போனது அந்நாட்டினின்று
                                         செய்வதறியாது
மரம்போல் நின்ற மக்களோடு     
                         
தரையோடு சாம்பலாய் தகித்தடந்கிற்று

                                           ..........................மதுரை !!

vinaiththogai

வினைத்தொகை ....

நேற்று ...
அவர் அலுவலகம் விட்டு வந்ததும் 
சண்டை
அவள் விட்டுக்கொடுத்தால் !

இன்று...
இவள் அலுவலகம்  விட்டு வந்ததும் 
சண்டை 
அவள் விட்டுக்கொடுக்கிறாள் ....!!

நாளை ..
யாராவது ஒருவர் வந்ததும்
சண்டை 
அவள் விட்டுக்கொடுப்பாள் ....!!!

என்றும்
காலங்கள் மாறலாம் - சண்டைக்கான 
காரணங்கள் மாறலாம் ...
அவள் மட்டும் மாறாமல் 
விட்டுக்கொடுத்துக் கொண்டே......... 

Muranbaadu

                    முரண்பாடு !

மரங்களை காப்போமென்று 
            மணிக்கணக்கில் கவிபொழிய 
அரங்கினில் அதனைக் கேட்டு 
           அடங்காத கரகோஷங்கள் !

உரத்த சிந்தனைஎன்றே 
           உயர்ந்தோர் அதனை மெச்சி
தரத்தினில் உயர்ந்த மரத்தினை வெட்டி 
          தகுந்த சன்மானமென வழங்கினர் ....
                                                   கேடயம் !!

Ninaivugal

                                 நினைவுகள் !!

பின்னோக்கிப் பார்க்கின்றேன் 
      பெரியதொரு பாதை - அதில் 
தன்நோக்கில் பயணிக்க
      நினைக்குமிந்தப் பேதை !
மண்ணான ஆசைகளை 
     மனம் நினைத்துப் பார்க்கும் 
பொன்னான நினைவுகளில் 
     புதிய சக்தி பிறக்கும் !
எந்நாளும் இறவாத 
    புகழ் பெறவே வேணும் 
கண்ணான இறைவா உன் 
    கருணை தானே வேணும் !!  

Thesaththin kural !

                            தேசத்தின் குரல் !

வெட்டிக்கதைகள் பேசி 
சுட்டித்தனங்கள் செய்து 
தட்டிக்கழித்த காலம் போதுமடா  

வாட இளைங்கனே உன்
வலிமையை உணர்ந்(த்)திட  
உன் தரத்தினை உயர்த்திட 

சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டாய்
அகில அரங்கில் வளர்கிறோம் ,,வளர்கிறோம்..
வளர்ந்துகொண்டே இருக்கிறோம் !

வல்லரசாவது எப்போது ? - உன் 
வலிமைமிக்க கரங்கள் ஒன்றுபடும்போது !!!


Haikoo.....

ஹைக்கூ ......!!!


தமிழ் இலக்கியத் தோப்பின் 
                   இளைய குயில் !!


கதை....விதை...கவிதை...


அவள் கதைத்தால்
        அவன் விதைத்தான் 
                   உருவானது புதிய கவிதை  

                               .........................  குழந்தை !

கண்தானம் 

மண்ணுக்குள் செல்லும் கண்ணுக்கு
          ஒரு மறுவாழ்வு !

முத்தான முத்து !

என்னவள் வீட்டின் முன் 
இத்தனை முத்துக்களா ?

ஓ ! அவள் மழைத் துளியை கையால் தட்டி 
                   விளையாடிக்கொண்டிருக்கிறாள்  ! 

படிப்பினை 

பங்கித்தின்றால்
பசியாறும் 
கற்றுக்கொண்டன 
காக்கைகள் மட்டுமே !

மலர்  

கருவண்டையும்  
கவிதை பாட வைத்த 
கட்டழகி !!

தென்றலே !

வண்ணமலரோடும்
வாழை இழையோடும் 
தென்னங் கீற்றோடும் 
தேமாங் கனியோடும்
சத்தமின்றி - நீ 
சல்லாபித்தது போதாதா ?

என்னவளின் 
இடை மறைக்கும் 
உடை வருட  என்ன துணிச்சல் உனக்கு ?

சாக்பீஸ் 

கரும் பலகையோடு- ஓடி ஓடி 
காதல் மொழி பேசினாய் 
அந்தோ !
உருவம் தேய்ந்தபின் 
உதாசீனப் படுத்தப் பட்டாய்  !!

அமாவாசை 

நிலவுக்கு விடுமுறை நாள் !
இருளுக்கு விடுதலை நாள் !!

அவள் - அவன் 

அவள் 
             காரியத்தில்
             கண்ணாயிருக்கிறாள் !
அவன் 
            காரியத்தில் 
            கண்ணனை இருப்பதால் !

முரண்பாடு 

மரங்களைக்காக்க எழுதிய 
மணிக் கவிதைகளை  
அச்சேற்ற வேட்டுப்பட்டன 
ஆயிரம் மரங்கள் !!

கோபம் 

மனச் சலனத்தை காட்டிடும் கண்ணாடி ...
மனித நேயத்தை உடைப்பதில் முன்னோடி ...
அன்பினை முறிக்கும் தன்னாலே ...
அடைந்தவர் கெடுவர் பின்னாலே ...!!

ஒற்றுமை

மேகமும் அவளும்  ஒரு ஜாதி !
    கருமை நிறத்திலா ?
    கர்ணன் குணத்திலா ?
     அல்ல ..அல்ல ...
                               கண்ணீர் விடுவதில் !.... 

யதார்த்தம்

தடி எடுத்தவன் எல்லாம் 
தண்டக்காரன் என்றால்
இங்கு ..
குரங்குகள் கூட 
கோலோச்ச வந்துவிடும் !!

இன்றைய மானிடன்:

கணிப்பொறிக் காலத்திலும் 
மகாபாரதக் 
கதாப் பாத்திரங்கள் !!

மார்ச்சுவரி (பிண அறை )

நேற்றுவரை ..
       ஏழ்மைக் காற்றைச் சுவாசித்தவன் 
இன்று 
       ஏ.சிக் காற்றில் வசிக்கிறான் !!

புதுக்கவிதை !

தளை இல்லை .... கலையானவன் !
சீர் கேட்காத சிறப்பானவன் !
பொருளை மட்டும் பொதுவாக்கி 
எல்லோர்க்கும் புரியச் செய்வான் !
உணர்ச்சியை மட்டும் உயிர் மூச்சாய்க் கொண்டவன் !  

மழலை 

நிகழ் காலம் அறியா  
            வருங்கால மேதை !

மாடர்ன் ஆர்ட்

புதுமைதான் 
பொருள் புரியும்வரை ...
               ........ மங்கையின் மனம் !

காண்டக்ட் லென்ஸ் 

கண் பார்வை சுருங்கியது
         கண்ணாடிக்குள் ஒளிந்திருந்தேன் !
தேங்க்ஸ் டு சைன்ஸ் 
கண்ணாடியைச் சுருக்கி 
          கண்களுக்குள் ஒளித்து வைத்தேன் ....





Graamaththuk kuyilosai !!

                                          கிராமத்துக்குயிலோசை !!


 கோணல் வகிடு எடுத்து 
      கூந்தலிலே மல்லி வச்சு 
மூணு கல்லு வச்ச 
     மூக்குத்திதான் அணிஞ்சு

கண்டாங்கிச் சேலைகட்டி 
    கருத்த உடம்புக்காரி 
முடிஞ்சுக்கிட்டுப் போனாலோ 
    முந்தானையில் உம்மனச !

மனசப் பறிகொடுத்து 
    மயங்கித்தான் போன மச்சான் 
மார்கழிதான் முடியட்டுமே 
    மானை நீங்க கரம்பிடிக்க !!

காணி நிலமும் வேண்டாம் 
    காஞ்சிப் பட்டும் வேணாம்  
ஓலைக் குடிசை போதும்
    தாலிக்கு மஞ்சள் போதும் !!

எங்கப்பன் சம்மதிச்ச 
    எல்லைச்சாமி கோயிலில 
கல்யாணம் கட்டிக்கிறேன் 
    காலமெலாம் உன் கூடவறேன் !!!